மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவை ‘இந்துத்துவத் தலைவர்’ என பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதற்கு அ.தி.மு.க-வின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சர்ச்சையின் பின்னணி என்ன?
பா.ஜ.க-வின் மாநிலத் தலைவரான கே.அண்ணாமலை, சமீபத்தில் பி.டி.ஐ செய்தி முகமைக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா விட்டுச் சென்ற இடத்தை பா.ஜ.க. நிரப்பும் என்றும், ஜெயலலிதா ஒரு ‘மேம்பட்ட’ இந்துத்துவ தலைவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பி.டி.ஐ செய்தி முகமையின் ஆசிரியர்களுடன் பேசிய கே.அண்ணாமலை, தமிழ்நாட்டில் பா.ஜ.க. எந்த ஒரு கட்சியின் ஊதுகுழலாகவோ, அடிபணிந்தோ இருக்காது என்றவர், தொடர்ந்து பேசும்போது, ஜெயலலிதா மறைந்த பிறகு இந்துத்துவச் சித்தாந்தத்தில் இருந்து அ.தி.மு.க விலகிச் செல்வதால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பும் வாய்ப்பு தங்கள் கட்சிக்கு இருப்பதாக குறிப்பிட்டார்.
“ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, தமிழ்நாட்டில் அவர்தான் எல்லோரையும் விட மிகப் பெரிய இந்துத்துவத் தலைவர். 2014-க்கு முன்பாக, பா.ஜ.க. என்ற கட்சியும் ஜெயலலிதா என்ற தலைவரும் இருக்கும்போது, தன்னுடைய இந்து அடையாளத்தை வெளிப்படையாக முன்வைத்த ஜெயலலிதாதான் தமிழக இந்து வாக்காளர்களின் இயல்பான தேர்வாக இருந்திருப்பார்,” என்று கூறினார்.