மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று(06) இடைக்கிடையே மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.
இதனிடையே, பலத்த மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
13 மாவட்டங்களைச் சேர்ந்த 48005 பேர் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 159 தற்காலிக முகாம்களில் 10833 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பலத்த மழை காரணமாக 44 வீடுகள் முற்றாகவும் 4477 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, களு மற்றும் கிங் கங்கைகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் வௌ்ளமட்டத்திலேயே காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் ஏனைய ஆறுகளினதும் அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளிலும் ஏற்பட்ட வௌ்ளம் தற்போது வடிந்தோடுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய 8 மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.