யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகம் காணப்படும் இடங்களில் இவ்வாறு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கரவெட்டி, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இன்று(30) காலை முதல் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மழையுடனான வானிலையால் ஏற்படக்கூடிய அபாய நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களைத் தௌிவுபடுத்தும் விசேட வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களில் டெங்கு அபாயத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாட்டுக்கு உதவி வழங்காத தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் மீண்டும் அதிகரித்துள்ளது.
நிலவும் மழையுடனான வானிலையுடன் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.